Saturday, January 16, 2010

தை

விதைத்து உழைத்து விளைத்த பயிர்கள்
       செழித்து தலைசாய்த் திருக்க
அறுத்து அடித்துப் புடைத்த மணிகள்
       அம்பாரம் நிறைத்து இருக்க
தைக்கத் தைக்கப் பைகள் நிரம்பிட
       நெஞ்சும் நிறைந்து இருக்க
தைதை தகிட தகிட எனத்
      தைமகள் ஆடி வந்தாள்

Friday, December 18, 2009

காந்தி

அச்சம்தவிர் துச்சம்உயிர் எச்சம்உடல் எனவே
அச்சங்கிலி வெட்டித்துயர் விட்டுப்படச் செய்தே
மெச்சும்படி உச்சந்தலை தோளில்உயர் நிறுத்தி
இச்சந்ததி வாழும்படி வைத்தார்அவர் காந்தி

----------------------------------------------------------------------
அச்சங்கிலி : அச்சம் + கிலி, அடிமைச் சங்கிலி 

Friday, December 11, 2009

பாரதி துதி

அன்னை உண்டெனில் பாரதி! இக்கவிதைக்குத்
தந்தை உண்டெனில் - பாரதி!
உன்னைப் புகழ்ந்திட பாரதி! ஓராயிரம்
ஏட்டிலும் இயலுமோ பாரதி?
விண்ணின் மதிதனைப் பாடிடப் புலவர்
கோடிபல கோடியாய்க் கூடிடத்
தண்மதி அழகினிற் குன்றிற்றோ? தேயாமதி
நின்போல் புகழ் கூடிற்றோ?

எல்லோரும் ஒன்றென்று உரைத்திட்டாய் அதைச்
சொல்லி எல்லோரினும்நீ உயர்ந்திட்டாய்!
மெல்லத் தமிழினிச் சாகுமென்றாய் , தமிழ்
கொல்லும் எமனைநீ ஏகுமென்றாய்!
வல்லஉன் விழியால் பார்த்திட்டாய் கதிர்
பல்யுகம் வாழஒளி சேர்த்திட்டாய்!
மெல்ல உன்மீசை முறுக்கிட்டாய் கோடி
பல்லாயிர வர்க்காண்மை பெருக்கிட்டாய்

நற்றமிழாலே உந்தன் பாடலாயிற்று இன்று
நற்றமிழே உன்னைப் பாடலாயிற்று
கற்றபாட்டில் உணர்வு ஊற்றாயிற்று தமிழர்
உயிரிலே உறுதியாயது ஊரலாயிற்று
பெற்றதகுதி மிகுதியேது? நான்பாரதி பற்றே
அதிமிகுந்து மிகுத்துஓதி பாரதிமேதை
போற்றித் துதித்துச் சிந்தித்துப் புத்தியிற்
தித்தித்து உதித்ததே யிந்தத்துதி!

Saturday, November 21, 2009

மாடு

குப்பன் வீட்டில் ஒரு மாடு இருக்கிறது
அப்பன் வீட்டில் கன்றாயிருந்தபோது
துள்ளி விளையாடியது.


பெரியதானதும் மூக்கணாங்கயிறு போட்டு
வண்டியில் பூட்டிவிட்டனர்.
புல்லோ, பழையதோ, புண்ணாக்கோ
எதைப் போட்டாலும் தின்னும்


மாட்டுப் பொங்கலுக்கு மட்டும்
நல்ல உபசரிப்பு.


கொம்புகளுக்குக் கூட வண்ணமடிப்பார்கள்
அதுவும் குப்பனுக்குப் பிடித்த கட்சியின் வண்ணம்.
 கொட்டிலில் கட்டும் போதும்
கால்வாயில் குளிப்பாட்டும் போதும்
குப்பன் அதைக் கொஞ்சுவான்


மற்ற நேரங்களில் சாட்டையடிதான்
மாட்டுக்கு இரண்டுமே பழகிப் போயிற்று

பசித்த பிள்ளைகளுக்கு சாப்பாடு போட்டு தூங்கவைத்து
முடித்த கூந்தலை அவிழ்த்துப் பின்னி, அவிழ்த்துப் பின்னி
'குடித்தனம்' நடத்தும் குப்பன் வருகைக்காகக்
காத்திருப்பாள் அவன் மனைவி

அந்த வீட்டின் மாட்டுப்பெண்.





Friday, November 20, 2009

சாமி எறும்பு

அய்யப்ப சாமிக்கு ஆசாரமாய்ப் படைத்து
அம்மா சாமி தந்த
ஆவின் பாலில்
மிதந்தது -
"சர்க்கரை நோயால்" செத்த எறும்பு.
எதுத்துப் போட்டுவிட்டுக் குடித்து விட்டேன்.
சைவமா? அசைவமா?
சாமியே சரணம் ஐயப்பா.

Friday, November 13, 2009

பாலம்

நதியின் கரையில்
நடந்து கொண்டிருந்தோம் நீயும் நானும்
குறுக்குப் பாலம் தூரத்தில் தெரிந்தது - சிறியதாய்
    
எங்கேயோ வேகவேகமாய்ச் செல்வதாய்ப் 
பாசாங்கு   செய்த நதி
நாமிருவர் பேசுவதை ஒட்டுக் கேட்டுக் கொண்டே வந்தது


நடந்து கொண்டிருந்தோம் நீயும் நானும் -
குளிர்க்காற்றை நம் சுவாசங்களால் சூடாக்கி.
 நடந்து கொண்டிருந்தோம் நீயும் நானும்.

எடைகளுடன் நம் எண்ணங்களையும் சுமக்கவோ என்னவோ 
குறுக்குப் பாலம் பெரிதாகிக் கொண்டே வந்தது

நதியில்  ரகசியங்கள் தொலைத்து
கரையில் சிரிப்பொலிகள் தொலைத்து  
நிலவில் பகல் தொலைத்து - நாம் விடைபெறும் நேரம் 
பற்றிய உன்கரம் காற்றில் தொலைத்து -
     
கடந்து போனது ஞாபகமிருக்கிறது 
-பாலம்-
உடைந்துமா போனது நாம் கடந்ததும் ?

Thursday, November 12, 2009

ஹைக்கூ: புறமுதுகு

 நான் புறமுதுகு காட்டினேன்
என்றான் என்னை

முதுகில் குத்தியவன்  

Wednesday, November 11, 2009

காலை

எம்மைப் பாடுகபாடுக எனச்சோலை எல்லாம்
      புதுப்பூக்கள் சூட்டித்தம்மை அலங் கரிக்கும்
 பொருள் தேடுகதேடுக எனப்புள் ளினமும்            
      பொதுக்கூட்டம் கூட்டியங்கு தமர்க்கு உரைக்கும்
எம்மை விடுகவிடுக எனச்சேலை போர்த்தி
       தம்மைவாட்டும் துணைவனைத் தள்ளி வைக்கும்  
இருள் ஓடுகஓடுக எனஒளி எடுத்து
       திசைஎட்டும் கதிர் வழங்கும் காலையாகும்

Saturday, November 7, 2009

THANGLISH பாடல்: ஜிஞ்சர் கார்லிக்

( சமையல் தெரியாத கணவனுக்கு  / மனைவி  அல்லது மனைவிக்கு  / கணவன் பாடும் பாடல்  
" தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ" 
-- என்ற பாடலின் ராகத்தில் அமைந்தது   ... )

ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்-ஐப் போட்டு
வதக்க வேணும்மா காய்கறி 
பெப்பருடன் சால்ட்டும் சேர்த்துக் 
கொதிக்க  வேணும்மா கோழிக்கறி  

டேஸ்ட்டு ஏதும் இல்லையின்னா 
நீயும் கொஞ்சம் சால்டைப் போடு 
சால்ட்டு ரொம்ப ஜாஸ்தியானா
மேலும் கொஞ்சம் வாட்டர் போடு   

உண்மை அம்மா குக்கிங் ரொம்ப ஈசி அம்மா 
சமைப்பது சுலபமம்மா !!   ( ஜிஞ்சர் கார்லிக் ... )     

சுகரும் இல்லையின்னா டீ-யிலே   கருப்பட்டி போடலாம்
பாலும் இல்லாமலே வெந்நீரில் கருப்பு டீ போடலாம்

சாதம் இல்லையின்னா நூல் போன்ற நூடுல்சும் செய்யலாம்
பச்சைக்  காய்களையே கட் பண்ணி ரொட்டியில் வைக்கலாம்
இப்படி விதமா விதம் விதமா சமைத்திடலாம் என் கண்ணம்மா !!  ( ஜிஞ்சர் கார்லிக் ... )

ஆற்றில் நிற்கும் கொக்கே

ஆற்றில் நிற்கும் கொக்கே
சேற்றில் நிற்கும் கொக்கே
குளத்தில் நிற்கும் கொக்கே ... கொக்கே

ஏ .. கொக்கே ஏ .. கொக்கே
மீன் மக்கே.... உன் luck-ஏ
 

பறந்து திரியும் கிளியே
பழங்கள் தின்னும் கிளியே
பழுத்த மூக்குக் கிளியே ... கிளியே


ஏ.. கிளியே .. வெகுளியே
பஞ்சு பழுத்தால் பழம் இல்லையே ..


ஆற்றில் நிற்கும் கொக்கே
பாலாற்றில் நிற்கும் கொக்கே
பால் வண்ண மேனிக் கொக்கே .... கொக்கே

பால் எங்கே? ஆறெங்கே?
மீன் எங்கே? மணல் எங்கே?