Tuesday, March 7, 2017

அவளும் பயிரும்


நட்ட விரல் நழுவிவிட
வேரை மண்ணு பிடிச்சிக்கிடும்
பொட்டச்சி நட்ட நாத்து
பொல பொலன்னு வளந்து நிக்கும்

கண்ணில் பட வேணுமின்னு
களைகளெல்லாம் தல தூக்கும்
கைப்பற்றி அவ இழுக்க
கெழங்கோட கழன்று வரும்

வரப்பு மேல அவ நடந்தா
கால்களுக்கு விசிறி விடும்
அறுத்த கதிரில் கால் பட்டா
கொலுசுபோல சிலுசிலுக்கும்

நெல்லு குத்தி அவ புடைச்சா
நித்திலமா பல்லிளிக்கும்
பானையிலே வடிச்ச சோறு
பூவப்போல வாசம் வீசும்

------------

அனைவருக்கும் முன்கூட்டிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

Monday, February 27, 2017

இலவு காக்கும் தமிழா

மொழியைக் காக்க மறந்தாய் - உன்
விழியைக் காக்க மறந்தாய்
இரவு காக்கும் தமிழா - நீ
விடியல் காண மறந்தாய்

உறவு காக்க மறந்தாய் - உன்
உரிமை காக்க மறந்தாய்
நரிகள் காக்கும் தமிழா - நீ
நெறிகள் காக்க மறந்தாய்

எழில்கள் காக்க மறந்தாய் - உன்
தழல்கள் காக்க மறந்தாய்
விழல்கள் காக்கும் தமிழா - நீ
தொழில்கள் காக்க மறந்தாய்

குலத்தைக் காக்க மறந்தாய் - உன்
நிலத்தைக் காக்க மறந்தாய்
இலவு காக்கும் தமிழா - நீ
உழவு காக்க மறந்தாய்

நதிகள் காக்க மறந்தாய் - உன்
நிதிகள் காக்க மறந்தாய்
நொதிகள் காக்கும் தமிழா - நீ
விதிகள் மாற்ற மறந்தாய்

Tuesday, February 21, 2017

தாய்மொழி தினம்


தமிழ் எனது தாய்மொழியானது நான் பெற்ற வரம்.
தமிழ் எனது பேத்தி மொழியாவது நான் வேண்டும் வரம்.

#தாய்மொழிதினம்

#தினந்தினம்

Friday, February 10, 2017

கீதாஞ்சலி பாரதி பாணியில் - பாடல் 36

சந்தம்: மனதிலுறுதி வேண்டும்

மனதிலுறுதி வேண்டும்
இன்பதுன்பம் எளிதென்று ஏற்றிட
இறைவ நீயெந்தன் நெஞ்சின்
வறுமையின் வேரினை அறுத்திட வேண்டும்

ஏழைகளை விட்டு நீங்கி
மமதையுள்ளோர் முன்பு மண்டியிடாமல்
நிதமும் சேவையில் மூழ்கி
எனது அன்பும் இங்கு பயனுற வேண்டும்

நலிந்த செயல்கள் நீக்கி
பொலிந்திடவே நெஞ்சில் பலமும் வேண்டும்
பெருமைகள் விட்டு நீங்கி
நின் சரண்புக நெஞ்சினில் உரமும் வேண்டும்

Tagore's English version:

This is my prayer to thee, my lord—strike, strike at the root of penury in my heart.Give me the strength lightly to bear my joys and sorrows.Give me the strength to make my love fruitful in service.Give me the strength never to disown the poor or bend my knees before insolent might.Give me the strength to raise my mind high above daily trifles.And give me the strength to surrender my strength to thy will with love.

Thursday, February 2, 2017

அவளும் நானும்

அவளும் நானும் உமையும் சிவனும்
அவளும் நானும் விழியும் வழியும்
அவளும் நானும் உரமும் பயிரும்
அவளும் நானும் கதையும் பாட்டும்
அவளும் நானும் அறமும் பொருளும்
அவளும் நானும் காற்றும் குமிழும்
அவளும் நானும் அகமும் புறமும்
அவளும் நானும் அருகும் தொலைவும்
அவளும் நானும் சரியும் தவறும்
அவளும் நானும் சிவப்பும் கறுப்பும்

Friday, January 27, 2017

கீதாஞ்சலி பாரதி பாணியில் - பாடல் 35

சந்தம்: அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

எங்கு மனங்கள் அச்சமின்றி
தலை நிமிர்ந்து நிற்குமோ
எங்கு பணத்தின் தேவையின்றி
யார்க்கும் கல்வி கிட்டுமோ
அந்த சொர்க்க பூமியாக
எந்தன் தேசம் விழிக்கட்டும்

எங்கு பூமி பூசல் கொண்டு
பிரிந்து நிற்கவில்லையோ
எங்கு நெஞ்சின் ஆழம்கண்டு
உண்மை வார்த்தை ஆகுதோ
அந்த சொர்க்க பூமியாக
எந்தன் தேசம் விழிக்கட்டும்

எங்கு மக்கள் முயற்சி நல்ல
மாற்றம் நோக்கிச் செல்லுமோ
எங்கு தெளிந்த எண்ண ஓடை
பாலை நிலங்கள் தாண்டுமோ
அந்த சொர்க்க பூமியாக
எந்தன் தேசம் விழிக்கட்டும்

பரந்த எண்ணம் செயல்கள் எங்கு
சிந்தையைச் செலுத்துமோ
அந்த சொர்க்க பூமியாக
எந்தன் தேசம் விழிக்கட்டும்

Tagore’s English version:

Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening thought and action
Into that heaven of freedom, my Father, let my country awake.

Wednesday, January 11, 2017

பழைய பாய்லர்

பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்கையில்
பரணில் பழைய பாய்லர் இருந்தது.
கரி போட்டு வெந்நீர் வைத்த
சிறுவயது நினைவுகள்
நெஞ்சினுள் புகையெழுப்பிக் கிளம்பின
போட்டுவிடலாமா என்று வீட்டில் கேட்டதற்கு
வேண்டாம் இருக்கட்டும் என்றேன்.

சிறுவயது நினைவுகளுடன்
எப்படி நம் காதல் நினைவுகள்
கலந்தன என்று தெரியவில்லை
பாய்லரைத் தொட்டு சூடு பார்த்த நினைவில்
உன் கன்னம் தொட்ட நினைவு வந்தது
குளித்துத் துடைத்த நினைப்பில்
உன் கண்ணீர் துடைத்த நினைவு வந்தது
துடைத்து பத்திரமாய்க் கட்டிவைத்தேன்.

உன் வீட்டுப் பரணிலும்
ஏதோ ஒரு பொருளில்
நம் காதல் ஒளிந்திருக்கக் கூடும்.
அதைப் போடாமல் வைத்திரு
அது இருப்பதால் ஒரு பயனும் இல்லாமல் இருக்கலாம்
அது இருக்கிறது என்ற பயனைத் தவிர

Friday, January 6, 2017

புத்தகத் திருவிழாவில் "பிள்ளைப்பா"

இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் "யாமறி" தமிழ்க் குழும நண்பர்கள் பலரின் முயற்சியில் உருவான "பிள்ளைப்பா" மழலையர் பாடல்கள் (புத்தகம்+ஆடியோ CD) நான்கு அரங்குகளில் கிடைக்கும்.
1. பனுவல் (அரங்கு எண் : 471, 472)
2. நூலகம் பேசுகிறது (அரங்கு எண்: 409)
3. புதுகைத் தென்றல் (அரங்கு எண் : 82)
4. தெய்வப்புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக்கூடம் (அரங்கு எண் : 214)
இந்த முறை புத்தகச் சந்தை கழிவு விலையுடன் நமது கூடுதல் சலுகையையும் சேர்த்து 20% கழிவு விலையில்(ரூ 120/-) கிடைக்கும்.

"நேர்மறை எண்ணங்கள்; தாய் மண்ணின் வண்ணங்கள்" நம் மழலைகளுக்கு ஊட்டவேண்டும் என்பதே இந்த வெளியீட்டின் நோக்கம்.

25 பாடல்கள் அடங்கிய இந்தத் தொகுதியின் சில பாடல் துளிகளை இங்கே கேட்கலாம்.







Friday, December 2, 2016

டேக் இட் ஈஸி பாலிசி

A R ரஹ்மானின் கீழ்க்கண்ட Face Book பதிவிற்கு எனது முயற்சி :
Dear friends, I'm trying to rearrange 'Take it Easy Urvasi' for a performance and wish to update the Charanams.
Feel free to contribute.. Ofcourse please do leave out and avoid any reference to Hilary Clinton, Donald Trump or the currency situation for now and try to come up with something interesting & humorous in the same scaling of the original Tamil version..
------------------------------
(சிறிய மழலைகள்)
Fridge-ல் வைத்த தாய்ப்பால் கிடைத்தால் டேக் இட் ஈஸி பாலிசி
பிஞ்சு உடம்பில் Flu shots கொடுத்தால் டேக் இட் ஈஸி பாலிசி

(பள்ளி மாணவர்)
Geometry Box-ஐ அண்ணனும் கேட்டால் டேக் இட் ஈஸி பாலிசி
Zoology teacher long leave போனால் டேக் இட் ஈஸி பாலிசி

(கல்லூரி இளைஞர்)
அடிக்கடி வீட்டில் உப்புமா செஞ்சா டேக் இட் ஈஸி பாலிசி
Arrears clear பண்ண அப்பாம்மா கேட்டால் டேக் இட் ஈஸி பாலிசி

(அலுவலகத்தில்)
ஜிம்முக்குப் போயி நண்பனும் இளைத்தால் டேக் இட் ஈஸி பாலிசி
ஜம்முன்னு ஆன்சைட் எனிமியும் போனால் டேக் இட் ஈஸி பாலிசி

(NRI)
Statue போல் Beauty - Break up சொன்னால் டேக் இட் ஈஸி பாலிசி
Statue of Liberty Torch Light கொடுத்தால் டேக் இட் ஈஸி பாலிசி

(முதியவர்கள்)
Skype-ல் பேசப் பேத்தியும் மறுத்தால் டேக் இட் ஈஸி பாலிசி
Wife பேச்சைப் பையனும் கேட்டால் டேக் இட் ஈஸி பாலிசி

Thursday, November 24, 2016

புத்தி உள்ள மனிதன் எவனும்

புத்தி உள்ள மனிதன் எவனும் வட்டிக்கு வாங்குவதில்லை
வட்டி நிறைய கட்டும் மனிதன் புத்திசாலி இல்லை

பணம் இருக்கும் மனிதனிடம் கடன் இருப்பதில்லை
கடன் இருக்கும் மனிதனிடம் பணமும் சேர்வதில்லை
கடமை என்ற பெயரினிலே கடனை வாங்கிக் குவிப்பான்
கௌரவத்தின் பெயரினிலே மானத்தையே இழப்பான்

அவசரத்தில் வாங்கும் கடனை அவசியமாய் நினைப்பான்
அலட்சியத்தால் அதிக வட்டிப் புதைகுழியில் நடப்பான்
ராப்பகலாய் அவன் உழைப்பான் வியர்வையிலே குளிப்பான்
ஆப்படித்து வால் நுழைத்த குரங்கைப் போல முழிப்பான்

நல்லவர்கள் கொடுக்கும் கடனை நாமம் போட நினைப்பான்
பொறுக்கியிடம் வாங்கும் கடனைப் பொறுப்புடனே அடைப்பான்
கருப்புப்பண முதலைக்குத்தான் கறிசோறு படைப்பான்
கழுத்தை நீட்டி வந்தவளைப் பட்டினி போட்டுப் படுப்பான்