Wednesday, November 26, 2014

நல்வரவு - சிறுகதை


"மாதவி போலாமா?" கார் சாவியைச் சுழற்றியபடி கண்ணன் கேட்டான்.

கணினியை அணைத்துவிட்டு மாதவி கிளம்பினாள். இன்று மாலை கண்ணன் வீட்டில் உணவருந்த அழைத்திருந்தான். வழக்கமான ஹாஸ்டல் உணவுக்கு ஒரு நாள் விடுதலை என்றால் எந்த ஒரு தனி-மனுஷி தான் வேண்டாம் என்பாள்? "தனி ஒரு மனுஷிக்கு உணவில்லை எனில் இஜ்ஜகத்தினை.............." சரி விட்டுவிடுவோம்..ஓவர் பில்ட் அப் வேண்டாம்.

கண்ணன் வீட்டைத் திறக்கவே மாதவி கேட்டாள் "கண்மணி இன்னும் அவங்க அலுவலகத்திலிருந்து வரவில்லையா?"

"இல்லை மாதவி. அவங்க அத்தைக்கு உடம்பு சரியில்லை என்று போன் வந்ததாம். அவள் நேரே அங்கே போய்விட்டாள். நீங்க மாதவி டின்னரை கேன்சல் பண்ணாதீங்க. மீன் குழம்பு பண்ணி வச்சிருக்கேன், இட்லி மட்டும் ஊத்திவச்சிடுங்கன்னு சொன்னா... உன்கிட்ட சொன்னா நீ வராம இருந்திடப்போறன்னு சொல்லல..."

"அடடா..." என்று உள்ளே வந்தவளைச் சுவரில் மாட்டியிருந்த 'நல்வரவு' என்ற எழுத்துகள் வரவேற்றன. "இந்த வரவேற்பு எம்ப்ராய்டரி ரொம்ப அழகா இருக்கு கண்ணன்" என்றாள். "இது கண்மணியே போட்டது. அவர்களின் பக்கத்து வீட்டு அத்தையிடம் கற்றுக்கொண்டாளாம்" என்றான் கண்ணன்.

“Welcome என்று ஆங்கிலத்தில் சொல்வதை 'நல்வரவு' என்று தமிழில் மாற்றும் போது பொருள் எவ்வளவு அழகாக மாறிவிடுகிறது? யாரேனும் தீய மனிதர்கள், ஏன் துஷ்ட தேவதைகள் வீட்டுக்குள் வந்தாலும் "நல்வரவு" என்பதைப் பார்த்துவிட்டு நல்லது மட்டும்தானே செய்யத்தோன்றும்?” என்று தமிழின் பெருமையைத் தனக்குள்ளாகவே சிலாகித்துக் கொண்டாள் மாதவி.

சோபாவில் அமர்ந்து கண்ணன்-கண்மணி திருமண ஆல்பத்தில் தனது முகம் எங்கெங்கு தெரிகிறது என்று தேடுகையில் கண்ணன் கொண்டு வந்த காபியைச் சுவைத்தாள். "காபி பிரமாதமாக இருக்கிறது.." என்றவளிடம் "நான் வெறுமனே பாலை மட்டும்தானே கலக்கினேன்.. கண்மணி போட்டுவைத்த பில்டர் டிகாக்ஷனின் சுவை இது" என்று சொல்ல நினைத்தவன் வெறுமனே "தேங்க் யூ" என்றான்.

"சரி நீ ஆல்பம் பார்த்திட்டிரு நான் உணவு தயார் பண்ணிவிடுகிறேன்..." என்று திரும்பிய கண்ணனை மாதவி நிறுத்தினாள். "கண்ணன், நான் இன்னொரு நாள் சாப்பிட வருகிறேன். நீங்க கண்மணிக்கு போன் பண்ணி அவங்க அத்தைக்கு எப்படி இருக்குன்னு பாருங்க.. நான் இப்பவே கிளம்புனா ஆட்டோல பத்து நிமிஷத்துல PVR போயிடலாம்"

“PVR ஆ?"
“ஆமாம். நீங்க சமையலறையில் இருக்கும்போது பிரண்ட் போன் பண்ணினா.. டிக்கட் எடுக்கச் சொல்லிட்டேன்"

“என்ன படம்?”
“நல்வரவு”

Thursday, October 23, 2014

ராஜகீதம் - கீரவாணி

இன்று நான் கேட்டு ரசித்த பாடல் 'பாடும் பறவைகள்' படத்திலிருந்து 'கீரவாணி'

கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ...
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி

க ரி ச ப ம க ப நி ....
ச ரி க ரி க ச நி ப ...
நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி பூப்பூத்தது பூங்கொடி....
தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய்

1. முதல் interlude-ல் வரும் வயலின் இழைப்பு வேறு எந்தப்பாடலிலும் இல்லாத பிரமாதம்

2. அதே interlude-ல் ஸ்வரம் சொல்கையில் ச ரி க ரி க ச//// நி ப//// என்று சொல்லிவிட்டு ////நீ பா////ர்த்ததால் என்று சரணத்தைத் துவக்குவது அதி அற்புதம். ராஜா/வைரமுத்து சிந்தனை.

Sunday, October 19, 2014

புரட்டாசி - லிமரிக்

புரட்டாசி முடிஞ்சி போச்சி
தைரியமா சாப்பிடலாம் கவுச்சி
அறுத்துத் தொங்குது அங்க ஆடு
வறுத்து வை ஆங்க்ரி பேர்டு
இந்தச் சேவலா காலைல கூவிச்சி?

Sunday, August 3, 2014

அத்தே.. அத்தே..

ஞாயிற்றுக் கிழமை மதியம்....

ஆடிமாதம் புதுமனைவியை அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டு வார இறுதியில்கூட மாமியார் வீட்டு விருந்து சாப்பிட முடியாமல் தனிமையில் தவிக்கும் நம் கதாநாயகன் பாடும் பாடல் வரிகள் இவை...

அத்தே அத்தே அத்தே சோறாச்சோ...?
அத்தே அத்தே அத்தே கொழம்பாச்சோ...?
மீன் சட்டிக்குள்ளாற
மீன் நீந்தித்தான் போச்சோ..?
அத்தே பிரியாணி புலவும்தான் செஞ்சீங்களா?
அந்தத் தொடகறியும் தொக்காட்டம் பண்ணீங்களா?
அதப் பல நாளாப் பாக்காம
பல்தேச்சும் பலனில்ல
பசியோடு கெடக்கேனே நானே.. நானே...


GV தம்பி இந்தப் பல்லவியை OK பண்ணுவாருன்னு தான் நெனக்கிறேன்.

அப்படியே டைரக்டருக்கும் ஒரு scene suggestion சொல்லிடணும்...
"ஹீரோ இந்தப் பாட்டைப் பாடிக்கிட்டே பாய் கடை பிரியாணியாவது பார்சல் வாங்கிவரலாம்னு தெருவில் நடந்து போறாரு.. பாட்டு முடியும்போது அங்காளம்மன் கோயில் வருது.. அங்கு ஒரு அக்கா ஆடி மாசம் கூழு ஊத்துறாங்க.. 'தம்பி இந்தாப்பா'ன்னு கொடுக்கவே மறுக்க முடியாம ஒரு டம்ளர் குடிக்கிறாரு. உடம்புக்குக் "குளிர்ச்சிப்பா"ன்னு சொல்லவே மேலும் இரண்டு மூன்று டம்ளர் வாங்கிக் குடித்துவிட்டு ஏப்பம் விடுகிறார்.. இதோடு லஞ்ச் போதும்னு மீசையில் ஒட்டிய கூழை நாவால் ஹீரோ வழிக்கும்போது அப்படியே காமிரா ஜூம் ஆகிறது.."

Wednesday, June 11, 2014

தாரை தப்பட்டை

இசைஞானி இளையராஜா அவர்களின் 1000-ஆவது படமான "தாரை தப்பட்டை" படத்திற்கு நான் எழுதிய Title Song-ஐ (கற்பனை தாங்க!) உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன்
---------------------------------------------------------

தாரை தப்பட்டை ஆதியில் தமிழனின் நாதமடா
தாரை தப்பட்டை ஜாதிகள் மீறிய வேதமடா
தாரையும் இழுத்திடும் மூச்சானதோ
பறைதான் இதயத்தின் பேச்சானதோ - அட
ஊர்விட்டுப் போனாலும்
உடல் கொண்டு போகின்ற
உயிரான இசைஎன்றும்
உயர்வான இசையன்றோ? கேளு – ( தாரை தப்பட்டை )

பரமாடும் நட ராஜன் ராஜன் - அழகு
அரவாடும் முடி சூடும் ராஜன் - அவனின்
சிரமீது நுரை பொங்கி
கரை மீறி நதி ஆட ஆட- அதனில்
படகாக பிறையாட ஆட - இடது
பதம் தூக்கி நடராஜன் ஆட
அட ஆடட்டும் ஆடட்டும் எல்லாம்
என ஆடிடும் அரைபாகம் மாதன்
அந்த விடைபாகன் தடக்கையில்
அடிக்கின்ற உடுக்கையொலி
தடக் என்று தடக் என்று கேட்கும்
அந்த இசை இந்தப் பறையினிலும் கேட்கும்….. கேளு – ( தாரை தப்பட்டை )

மக்கள் பிரதிநிதி

மக்கள் பிரதிநிதி நான்.
ஏழைப் பங்காளன்; பங்காளி அல்ல.
கௌரவம் காப்பேன்.
கௌரவர்களில் ஒருவனல்ல.

என்னது.. லஞ்சமா? என்னது.. கொஞ்சமா?
ஏன்.. எனக்கென்ன பஞ்சமா?
நீரோடி மீனோடிய வயலினில் ஏரோட்டி,
வீதியெலாம் தேரோட்டிய
வீர மண்ணின் மைந்தன் நான்;
ஈர மண்ணின் இளவல் நான்.
பல தலைமுறைக்குச் சோறிட நெல்லுண்டு
சில தலை நிழல் சாய்ந்திட வீடுண்டு
அடுத்தவன் இலையில் கைவைக்க
நான் என்ன பிச்சைக்காரனா?

என்னது? பொண்டாட்டி கேட்பாளா?
பாசமாய்ப் புல்லறுத்துப் பாட்டி வளர்த்த பசுவின்
பேத்தி ஈன்ற பசு, பத்து குடம் பால் கறக்க
என் மனைவியின் பட்டு விரல் படுமா
அவள் சுட்டுவிரல் தொடுமா,
ஊரான் வீட்டு நெய்?

என்னது? பிள்ளைக்குச் சேர்க்கவா?
ஏன்.. என் சிங்கத்துக்குக்
கையில்லையா? காலில்லையா?
தினவெடுத்த தோளில்லையா?
அவன் ஒரு ஆளில்லையா?
அப்பனுக்குப் பிள்ளையிடுவதா-
பிள்ளைக்கு அப்பனிடுவதா வாய்க்கரிசி?

Thursday, May 15, 2014

பெண் பார்க்கும் படலம்

முதல் பார்வையிலேயே
ஒரு பொறி தோன்றியது.
பற்றிக்கொண்ட பார்வைகள்
அடுத்தடுத்துப் பார்க்கையில்
ஆர்க் வெல்டிங் அடித்து
ஒட்டிக்கொண்டன இரும்புத் துண்டுகள்.
வாய்மொழிக்கு முன்பாக
உடல்மொழியில் திருமண உறுதி செய்துவிட்டு
இழுத்துவிட்ட இருவரின் மூச்சிலும்
நாதஸ்வர ஆலாபனை ஆரம்பித்துவிட்டது.
மணநாள் நினைவுகளில்
மேளதாளம் கொட்டி தாலி கட்டுமுன்னே
கோலம்போட்ட உன் கால்விரலில்
கண்களால் மெட்டியணிவித்துவிட்டுக்
காத்திருந்தேன்.
நீ காபி கொண்டுவருகையில்
கண்டேன் உன் கையில் பால்செம்பு.

Saturday, May 10, 2014

மல்லி வைத்து வந்துவிடு

செடியில் கிள்ளித்தான் வைத்தாயோ?
என் அத்தை
சொல்லித்தான் வைத்தாயோ?
என்னத்தைச் சொல்வது..
நீ அள்ளிவைத்த கூந்தலில்
ஆடிவரும் மல்லிகையை?

பள்ளிக்கூட பெஞ்சின் மேல்
நீ பஞ்சு போல் உட்கார
கட்டடத்துள் வட்டமிட்டு
பட்டம்போல பறக்குதடி
நீ கட்டி வந்த மல்லி வாசம்.

பள்ளிச் சீருடையா இல்லை
மல்லிக்கு மேட்சிங்கா
இந்த வெள்ளை சட்டை?
என்னைக் கட்டி வெச்சாலும்
கண்ணக் கட்ட முடியலையே..
திகட்டத் திகட்டப் பார்க்கிறேன்
தின்னாமலே தித்திக்கும்
வெல்லக் கட்டி உன்னையே...

நல்ல நாளைப் பார்த்துவிட்டேன்
நானும் உன்னைக் கட்டிவிட…
கடைசி பரீட்சை முடியும் அந்த
மாலையில் தான் ரிசப்சன்.
மண்டபத்துக்கு மறக்காமல்
மல்லி வைத்து வந்துவிடு.

அம்மா...

உயரத்தைப் பொருட்படுத்தாது
உவப்புடன் கழுத்தை நீட்டி
குடும்பம் எனும் இரட்டை மாட்டு வண்டியில்
அப்பாவின் இழுப்புக்கு மூச்சிரைக்க ஓடி
சில நேரம் முரண்டுபிடித்து
வண்டியைச் சரியான பாதையில் திருப்பி
உன் பிள்ளைகள் நாங்களும்
ஏதேனும் ஒருவிதமாய் உருப்பட
ஓடி ஓடி இன்னும் ஓயாத அன்னையே...
வயதான காலத்திலும்
சுமையான உந்தன் கழுத்து பாரத்தைப்
புனிதமென்று போற்றிப் பொட்டிட்டுக்
கண்களில் ஒற்றிக்கொள்ள
பாட்டனிடம் பாடாய்ப் பட்ட
பாட்டியிடமா கற்றாய்?
பைத்தியம் நீ.

Tuesday, April 8, 2014

இராம நவமி

மாமுனி சொல் கேட்டு வில் முறித்தாய்
தசரதன் சொல் கேட்டு முடி துறந்தாய்
வைதேகி சொல் கேட்டு மான் தொடர்ந்தாய்
சுக்ரீவன் சொல் கேட்டு வாலி வதைத்தாய்
கொடியதோர் குடி சொல் கேட்டு
துணைவியைத் தீ விதைத்தாய்
சொல்வார் சொல் கேட்பவன் ராமனென்று
யானும் உன்னை நிந்திக்கவோ?
நீ வந்துதித்த இந்நாளில்
நீ வந்துதித்த என் நெஞ்சில்
நாட்டம் வேறொன்றும் இல்லை
நின் நாமம் பகர்தலன்றி
ராமா ராமா ராமா