Thursday, March 15, 2012

மண(&மன) உறுதி

ஒரு காலத்தில் கல்யாண நாள் வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருந்ததாகப் பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தக் காலத்தில் பிள்ளைகள் சொன்னால்தான் பெற்றோர்களுக்கு அவர்களின் திருமணம் பற்றித் தெரியவருகிறது என்று மிகைப்படுத்திச் சொன்னாலும் - இக்காலத்திலும் பெரும்பாலும் பெற்றோர்கள் பார்த்துத் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் தொடர்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.

இன்று மதியம் நண்பர்கள் யாரும் உடன் வராததால் நான் மட்டும் தனியாக எங்கள் அலுவலக உணவகம் சென்றேன். நான் அமர்ந்த மேசையில் இன்னொரு ஓரத்தில் இரண்டு இளம்பெண்கள் வந்து அமர்ந்தனர். அமர்ந்த அடுத்த நிமிடமே பேச ஆரம்பித்துவிட்டனர். நானும் நாகரிகம் கருதி அவர்கள் பேசுவது எதுவும் கேட்காமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். காதைப் பொத்திவைத்தாலும் காதைப் பொத்துக்கொண்டு சில செய்திகள் நம் காதில் விழுமல்லவா, அது தான் நடந்தது. ஒரு பெண் தன் திருமணத்தைப் பற்றி வெட்கமும் குதூகலமும் கலந்து பேசும்போது அதைக் கேட்காமல் எப்படி இருப்பது...?

நிச்சயதார்த்தம் (மண உறுதி விழா) சமீபத்தில் தான் நடந்ததாம்.
இது உறவினர்கள் மட்டும் கலந்துகொண்ட சிறிய விழா என்பதால் நண்பர்களை அழைக்கமுடியவில்லை என்று வருந்தினாள் அந்தப் பெண். கல்யாணத்துக்கு இன்னும் ஆறு மாதம் இருக்கிறது.
அழைப்பிதழ் வைக்கிறேன் கட்டாயம் வந்துவிடவேண்டும் என்றாள். அவள் தோழி ஆமோதிக்க, நானும் சம்பந்தா சம்பந்தமின்றி தலையை ஆட்டிவைத்தேன். பேச்சு தொடர்ந்தது. அந்தப் பெண்ணின் வருங்காலக் கணவர் வேலை செய்யும் நிறுவனத்தில் அவர் வெளிநாடு செல்ல வாய்ப்புக்
கிடைத்திருப்பதாகவும் திருமணம் முடிந்தவுடன் செல்லவேண்டும் என்றும் கூறினாள்.

இதுவரை ஒரு வழக்கமான கதையாக ஓடிக்கொண்டிருந்த இந்த உரையாடலில் ஒரு சுவாரசியமான திருப்பம் இப்போது வந்தது. கல்யாணத்துக்கு ஆறு மாதம் இருந்தபோதும் -விசா எடுக்க நாளாகும்
என்பதாலும் கல்யாணம் ஆன உடனே புறப்படவேண்டும் என்பதாலும் - அடுத்த வாரம் அவள் கல்யாணத்தைப் பதிவு செய்துகொள்ளப்போவதாகக்
கூறினாள். இச்செய்தி அவள் தோழியைப் போலவே எனக்கும் ஆச்சரியம் அளித்தது. இருந்தாலும் தோழி சமாளித்துக் கொண்டு 'அப்போ ஆறு மாசம் ஜாலி தான்னு சொல்லு' என்று கிண்டல் செய்தாள். 'அடப் போப்பா - போன்ல மட்டும் தான் பேசிக்குவோம் அவ்வளவுதான்' என்றாள் வெட்கத்துடன்.

என் தட்டில் தயிர்சாதமும் காலியாகிவிட்டதால் -அத்துடன் நடையைக் கட்டினேன். உரையாடல் கேட்காவிட்டாலும் கற்பனை மட்டும் எனக்கு தொடர்ந்து கொண்டிருந்தது. திருமணப் பதிவு நாளன்று அவன் என்ன பரிசு கொடுப்பான்? அவனும் நம்மைப் போல் பாரதி பக்தனாக இருப்பானோ?
"ஆத்திரம் கொண்டவர்க்கு கண்ணம்மா சாத்திரம் உண்டோடி?
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடி இதுபார் - கைஎழுத்திட்டுவிடு" என்று card எழுதிக் கொடுப்பானோ? என்ன சார் இந்த மாதிரி situation கௌதம் மேனன் படத்தில் தான் வரும் இதற்குப் போய் பாரதியார் பாட்டு எழுதுகிறீர்களே என்று இளைஞர்களாகிய நீங்கள் கேட்கலாம். எனவே ஒரு re-mix பாடலும் எழுதி அதையும் உடனே வெளியிடுகிறேன். ஒரு வேளை இந்த பாடல் பொருத்தமாக இருந்தால் கௌதம் மேனன் அடுத்த படமான 'நீ தானே எந்தன் பொன் வசந்தம்' படத்தில் பயன்படுத்திக் கொள்ளட்டும். ( என்ன ஒரு பேராசை என்று கேட்கிறீர்களா? கேட்காதீர்கள். அதற்குப்பதில் உங்களுக்கு கெளதமையோ அல்லது இசைஞானியையோ தெரியுமென்றால் அவர்களுக்கு என் பாடலைக் காட்டி புண்ணியம் சேர்த்துக் கொள்ளுங்கள்!)

மீண்டும் கதைக்கு வருவோம்.

திருமணத்துக்கு முன்பாகவே இப்படிப் பதிவு செய்து கொண்டால் அதில் என்னென்ன பிரச்சினைகள் வரக் கூடும்? இது எந்த விதமான ஒரு நம்பிக்கை..? நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறைத் தீர்ப்பல்லவா?

சிறு வயதிலேயே - இவன் உனக்குத்தான் - இவள் உனக்குத்தான் என்று காட்டி-காதல் வளர்த்த நம் தமிழ்ப் பண்பாடு - இந்த இரு உள்ளங்களுக்கும் காதல் வளர்ப்பதன்றி நல்வழியும் காட்டி நலமுடன் வாழவைக்கட்டும் என வாழ்த்துவோம்.

Sunday, March 11, 2012

தூண்டில்-2

மாட்டிய மீன்,
தூண்டில்காரன்,
வேடிக்கைப் பார்ப்பவர்-
இவர்கள் மட்டுமா?
தண்ணீரும் துடித்தது
........ தக்கை மூழ்கியதும்.
புழுவைத் தவிர.

Friday, March 9, 2012

தூண்டில்

முள்ளை முள்ளால் எடுக்கலாம்

Thursday, March 8, 2012

தத்துவமும் பித்துவமும்

 தத்துவம் பிறந்த காலம் முதலே பித்துவமும் உலகில் உலவிவருகிறது என்பது என் கருத்து. தத்துவத்தை மதிக்கும் நாம் பித்துவத்தை அவ்வளவாக மதிப்பதில்லை. திருக்குறளைப் போற்றும் நாம் தெருக்குறளையும் போற்ற வேண்டும் என்கிற மேலான கருத்தை வலியுறுத்தி இந்தப் பதிவு.  

'யாகவாராயினும் நாகாக்க காவாக்கால் யாராவார் யாகவா முனிவர்?" பெரிய ஞானிகளும் முனிகளுமே தத்துவத்துடன் பித்துவம் கலந்து தருவதை நாம் காலம் காலமாகக் கண்டுவருகிறோம். "மேனியைக் கொல்வாய்.. மேனியைக் கொல்வாய்.." என்ற கீதா உபதேசம் முதற்கொண்டு இதற்கு உதாரணங்கள் பல சொல்லலாம். ஆனால் 'அச்சம் என்பது தமிழர் உடமையடா' ( திராவிடர் என்று சொன்னாலும் வம்பு) என்கிற காரணத்தால் கிருஷ்ண பக்தர்களின் உதைகளிலிருந்து தப்பித்து வேறு உதாரணங்களுக்கு மாறிவிடுவோம்.


உதாரணங்களுக்கு முன்பாகப் பித்துவம் என்றால் என்னவென்று பார்ப்போம். தொல்'copy'யனின் விதிகள் சில:
1. பித்துவம் என்பது தத்துவத்தின் தழுவலாய் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
2. தத்துவ ஞானிகள் ஒதுக்கிவிடும் தத்துவங்களும் பித்துவமாகலாம்.
3. பித்துப் பிடித்தவர்தான் பித்துவம் சொல்லவேண்டும் என்றில்லை. ஆனால் பித்துவத்தில் கொஞ்சம் பித்துத்தனம் இருக்க வேண்டும்.
4. யாரையும் குத்தும் தனம் கூடவே கூடாது.
5. பாசம் காட்டலாம் ஆபாசம் கூடாது.
ஆகமொத்தத்தில் பித்துவம் என்பது ஒரு பின் நவீனத் தத்துவமாக இருக்க வேண்டும்!


கல்வி என்பது அழியாதது என்ற கருத்தைப் பித்துவமாய் இப்படிக் கூறலாம். 'ஒருவனின் பல் சொத்தை பிடுங்கலாம், பல சொத்தையும் பிடுங்கலாம் ஆனால் அவன் வித்த சொத்தை யாரும் பிடுங்கமுடியாது.'
(இங்கு 'வித்த' என்பதை வித்தை என்று எடுத்தாலும் விற்ற என்று எடுத்தாலும் - இந்தப் பித்துவம் பிழையாகாது.)


தேர்வுகளின் தொல்லையால் தூக்கம் தொலைக்கும் மாணவர்கள் முதல்மரியாதை படப் பாடலான "மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கல" பாடலைப் பாடினால் அது தத்துவம். இந்தப் பாடலை வைத்தே சில பித்துவங்களும் பாடலாம். செமஸ்டர் தேர்வில் மார்க் குறைந்துவிட்டால் "book-ஐ வாங்கினேன் mark ஏதும் வாங்கல" என்று பாடலாம். அதுவே கப்(அரியர்) வாங்கிவிட்டால் "கப் வாங்கினேன் மெடலு வாங்கல" என்று சைக்கிள் பெடல் சுத்தலாம்.  அடடா நான் பாடுவது என்பாட்டிக்குக் கேட்டுவிட்டது. அவரும் பாட ஆரம்பித்து விட்டார், "பிளாஸ்கு வாங்கினேன் காபியைக் காணல.."  இப்போது என் மனைவி பாடுகிறார்.."பர்ஸ் வாங்கினேன்..காசொன்னும் காணல..." பித்துவ மழையில் நனைந்துவிட்டேன்.


"காதல் ஒன்றும் சுத்த பத்தம் பார்ப்பதில்லையே எச்சில் கூடப் புனிதமாகுமே" என்றார் உதித் நாராயணன்.( கவிப்பேரரசிடம் வாதிட முடியுமா? அதான் உதித்...ஹி ஹி!) அதுபோல் பித்துவத்துக்கும் இடம் பொருள் ஏவல் கிடையாது. பெரும்பாலான பித்துவங்கள் குளியலறையின் ஷவரில் இருந்துதான் கொட்டும். மேலைக் கலாச்சாரத்தில் ஊறிஇருந்தாலும் பாத்ரூமில் பேப்பர் படிப்பதை சாமி குத்தமாகக் கருதவதால் எனது பாத்ரூம் நிமிடங்கள் பொதுவாய் அமைதியாகவே கழி-யும். இந்த அமைதியில் பிறக்கும் பித்துவங்கள் பல உண்டு. ஒரு நாள் யோசித்தேன் பாத்ரூம் டைல்ஸ் எல்லாம் மாற்றியிருக்கிறோம் ஒரு அழகான படம் மாட்டினால் என்ன? கதவில் ஏதாவது வாசகம் எழுதலாமா என்றும் யோசித்த போது ஒரு பாடல் நினைவுக்கு வந்தது ..... "போனால் போகட்டும் போடா.."!  இன்னொரு பாடல் கூட நினைவுக்கு வருகிறது. விதி எண் 5 -ஐ மீற விருப்பமில்லை!


தத்துவத்தின் தழுவலே பித்துவம் என்பதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம். "அட மீன் செத்தாக் கருவாடு நீ செத்தா வெறுங்கூடு - கண்ணதாசன் சொன்னதுங்க" என்று பாதி சரணத்தில் கண்ணதாசனை மேற்கோள் காட்டி "பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்" என்று மீதி சரணத்தை வைரமுத்து எழுதியிருப்பார். இதே உத்தியைப் பயன்படுத்தி நாமும் பித்துவம் பாடலாம். "பசு இருந்தாலும் புல்-ஆகும்* செத்தாலும் புல்லாகும்"(*ஆகும் - தீர்ந்துவிடும்) ..... புல்லரிக்கிறதா இல்லையா சொல்லுங்கள்? 

வெறும் நகைச்சுவைக்கு மட்டுமா பித்துவம்? தீய வழியில் செல்லும் இளைஞர்களையும் பன்ச் சொல்லித் திருத்தலாம். "கண்ணா நீ இன்னைக்கு தம் கட்டி தம் கட்டி தம் அடிச்சா..நாளைக்கு தம்-கட்டி தம்-கட்டி உன்னை அடிச்சிடும்" (தம்-கட்டி = lung cancer).

"பார்ல ஏறிட்டு கார்ல ஏறாதே..பிளாட் ஆகி பிளாட் வெளியில் படுக்காதே.." இப்படி எவ்வளவோ விஷயங்கள் சொல்லலாம்.

பித்தார்க்குப் பித்தான பித்தாக்கிப் பித்தார்க்குப் பத்தாகும் பிழை.. ! 
 
அன்பு நண்பர்களே, தத்துவ ஞானிகளிடமிருந்து தப்பித்து நமக்கு நாமே பித்துவம் வகுத்துக்கொண்டு வளமுடன் வாழ்வோம்  என உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
 
உங்கள் பித்துவ ஞானத்தை வைத்து எனக்கு உதவ முடியுமா? அடம் பிடிக்கும் குழந்தைகளை அடக்குவது எப்படி? ("மடப் பசுவாய் அடங்குமா அடம் பிடிக்கும் சிசு?" )

Monday, March 5, 2012

கண்ணால் காண்பது பொய்யா?

காதலில் சொதப்புவது எப்படி? படம் பார்த்து விட்டீர்களா? மற்றவர்கள் சொதப்புவதைப் பார்ப்பதில் நமக்கு ஒரு மகிழ்ச்சி என்றுமே உண்டு. ஆனால் நாம் சொதப்பிய விஷயங்களை நினைவுபடுத்திப் பார்ப்பது சிரமமான விஷயம்.

ஆபீஸில் பாஸுக்கு தவறான டேட்டா கொடுத்துவிட்டு அதைத் தானாகவே சொல்லிவிடுவது நல்லதா இல்லை அவராகக் கண்டுபிடிக்கட்டும் என்று விட்டுவிடலாமா என்று நண்பர்களிடம் அட்வைஸ் கேட்டுப் பட்டி மன்றம் நடத்தும் நண்பர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். நண்பர்கள் என்றால் நானும் ஒரு நண்பன் என்பது நான் சொல்லியா உங்களுக்குப் புரிய வேண்டும்?!

ஒரு காலத்தில், அப்பா டியுஷன் எடுக்கும் போது, சின்ன கிளாஸ் பசங்களுக்கு சில நேரம் என்னைச் சொல்லிக்கொடுக்கச் சொல்வார். அப்படி சில சமயங்களில் எதையாவது தப்பாகச் சொல்லிவிட்டு டியுஷன் முடிந்ததும் அந்தத் தப்பை உணர்வதுண்டு. மறுநாள் அதைச் சரியாகச் சொல்லிப் பசங்களைத் திருத்தும் வரை ஒரு குற்ற உணர்வு வாட்டிக் கொண்டே இருக்கும். இந்த அனுபவத்தின் காரணமாக, இப்போதெல்லாம் என் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருப்பேன். இருந்தாலும் ஒருமுறை நான் சொல்லிக்கொடுத்ததால் ஒரு பதில் தவறாகி ஒரு மார்க்கில் 'ஓ' கிரேடு போய்விட்டது என்று என் மகன் என் மனைவியிடம் சொல்லிவிட்டான். 'உன்னால் தான் ஓ கிரேடு போய்விட்டது' என்ற பஞ்ச் டயலாக்கை என் மனைவியிடமிருந்து இப்போது அடிக்கடி கேட்க நேர்வது முற்காலத்தில் டியுஷன் பசங்களுக்கு நான் செய்த பாவத்தின் சம்பளம் தான் என்பதை முற்றிலும் உணர்கிறேன்.
 
இதுபோல் சமீபத்திலும் ஒன்று நிகழ்ந்தது.
 
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரத்திற்குப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். இரு சிறு குழந்தைகளுடன் ஒரு பெண் பஸ்ஸில் ஏறினார். பஸ்ஸில் உட்கார இடம் இல்லாததால் ஒரு பையனை மனித நேயத்தின் பொருட்டு(?) என் மடியில் உட்கார வைத்துக்கொண்டேன். உடனே 'அங்கிள், அங்கிள்' என்று பேச ஆரம்பித்து விட்டான். அவன் பெயர் மோகனகிருஷ்ணன் என்றும் அவன் ஒன்றாம் வகுப்பு படிப்பது முதல் அவன் மிஸ்களின் பெயர்கள் எல்லாம் கூட சொல்லிவிட்டான். அதானே, மிஸ் பெயர் எல்லாம் எதற்கு என்னிடம் சொல்லவேண்டும்? சரி அது கிடக்கட்டும். இந்த வழியாகச் சென்றவர்களுக்குத் தெரியும் - இந்தப் பாதை நெடுகப் பாலாற்றின் கரையிலேயே செல்லும் என்று. பாலாற்றின் கரையில் செல்வதாலேயே இந்தப் பாதையில் செல்வது ஒரு சுகானுபவம். ஒரு திருப்பத்தில் வண்டி திரும்பும்போது மோகனகிருஷ்ணன் பரந்து விரிந்து கிடந்த பாலாற்றைப் பார்த்து 'அங்கிள் இது என்ன பாலைவனமா?' என்று கேட்டான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இந்தக் குழந்தைக்கு எப்படிச் சொல்லி புரியவைப்பது - இது ஒரு காலத்தில் பால் போல் பொங்கி ஓடிய ஆறு என்று? 'பாலை வனம்' என்று தமிழில் சொன்னானே என்பதில் மகிழ்ச்சி ஒரு புறம். கொஞ்சம் யோசித்துவிட்டு அது ஒரு ஆறு தான் என்பதை ஒருவாறாக அவனுக்கு விளக்கிவிட்டேன். 

இது நடந்து பத்து நாட்கள் ஆன பிறகு என் மனம் என்னைக் கேட்கிறது டியுஷன் பசங்களுக்கு சொன்னதுபோல் இதுவும் தவறான பதிலோ என்று. தோற்றத்தில் இது பாலைவனம் என்று நிதர்சனமாக ஒரு குழந்தைக்குத் தெரிகிறது.  இதை ஆறு என்று நான் ஏன் கூறவேண்டும்? கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாய் ஓடாத பாலாறு இனி ஓட வாய்ப்புள்ளதா? அண்டை மாநிலங்களில் அணைகள் உடையுமா? இல்லை காஞ்சிபுரம் வேலூர் மாவட்டங்களின் கழிவு நீர் அனைத்தையும் இதில் செலுத்தி கூவம் நதிபோல் வற்றாத ஜீவநதியாக இதை மாற்ற முடியுமா?
உங்கள் மடியில் மோகனகிருஷ்ணன் அமர்ந்திருந்தால் நீங்கள் என்ன பதில் கூறியிருப்பீர்கள்?

பி.கு. இந்த அனுபத்தில் உருவானதே பாலாறு என்ற என் கவிதை. ஆனால் அது ஒரு பரிமாணத்தை மட்டுமே காட்டுவதால் - முழு அனுபவத்தினையும் கட்டுரையாக இங்கு பதிந்துள்ளேன்.

Friday, March 2, 2012

கிலுகிலுப்பை

மாமாவிடம் பேசிக்கொண்டிருந்தேன் ஹாலில்.
மகளை அழைத்தார்..
"ஏம்மா... உன் மாமன் வந்திருக்கான் காபி போடு......."

நான் திரும்பிப் பார்ப்பதற்குள் முதுகின் பின்னால்
மல்லிகைவாசம் தூவிவிட்டு சமையலறைக்குள்
சலசலத்து நுழைந்தன கொலுசுகள்.
கையின் கீழிருந்து மேல் இறங்கிய
வளையல் சத்தம் உணர்த்தியது-
அலமாரியில் அவள் காபி பொடி எடுப்பதை.

மீண்டும் சிணுங்கிய வளையல்கள் சொல்லின-
சர்க்கரை... சர்க்கரை...கலப்பதை.
"காபி நுரையில் ஒளிந்த வளையல் சத்தம்"
என்று கவிதைக்குள் கவிதை எழுதிக் காத்திருந்தேன்-
அவள் அழகு முகம் தாங்கி வரும் கொலுசொலிக்காக.

"ஒரு கிலுகிலுப்பை கூட வாங்கித்தராத கஞ்சனடா உன் மாமன்"
சிறு வயதில் அம்மா சொன்னது
அபத்தமாய்த் தோன்றியது இப்போது!

Statutory Warning: நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வது மருத்துவ ரீதியாக உகந்ததல்ல.

Thursday, February 23, 2012

பாலாறு

எனது பாட்டன் காலத்திலும் 
பாலாற்றின் கரையில்தான் 
எங்கள் ஊர் சுடுகாடு.

என் காலத்தில்,
எங்கள் ஊர் சுடுகாட்டின் அருகில்
செத்துக் கிடக்கிறது பாலாறு.

வட்டமிட்டு, வட்டமிட்டு,
பிணந்தின்னும் கழுகுகளாய்
மணல் லாரிகள்.

Tuesday, February 7, 2012

மானிட இலக்கணம்

சூடான சோறும் ஆறிய சொற்களும் படைப்பவரே அன்னை; மனைவி
கொஞ்சம் பணமும் கொஞ்சும் மனமும் கொண்டவரே தகப்பன்; கணவன்
இருப்பதைச் சொல்லி இல்லாததைக் கொடுப்பவரே குரு
தன்னை உணரத் தன்னை உணர்த்துவதே தெய்வம்
அறியும் விழிகளும் ஆற்றும் விரல்களும் வளர்ப்பவரே வளரும் பிள்ளைகள்
அழைக்காமல் வந்து பழிக்காமல் செல்பவரே உறவும் நட்பும்
மனிதனாய் வாழ்ந்து மிருகத்தையும் நேசிப்பவரே மனிதர்



Thursday, January 12, 2012

"New York நகரம்" - remix

"New York நகரம்" பாடல் ஏ ஆர் ரகுமான் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதை remix செய்யும் முயற்சி இங்கே. திரு. வாலி அவர்கள் மன்னிப்பாராக!
_______________________________________________________

ரோஜாப் பூவும் பனியில் நனைந்து இதழ்கள் திறந்ததே...
அழைப்பிதழும் விடுத்ததே...
முட்கள் மீதிலும்... பனியின் முத்தம் படிந்ததே
நானும் கைநீட்டித் தழுவிடும் போது தொலைவில் மறைந்ததே...
நொடியில் கனவும் கலைந்ததே.. (ரோஜாப் பூவும்)

பார்த்திருந்த பாவை முகமும்
விழித்திரையில் படர்ந்த படம் தானோ
நீர்த்தெரித்து விழியும் மூட அணை
உடைக்கும் நினைவும் ஏனோ...ஓ ..ஓ ..ஓ ..?
வாழ்கின்ற காலமெல்லாம் உன்னை
என்னுள் வைத்து முழுவதும் நிறைத்த காதல் தேனோ?
நான்சென்ற தூரமெல்லாம் உந்தன் எண்ணங்களும்
எந்தன் நெஞ்சில் சுமைகள் ஆனதேனோ...ஓ ..ஓ ..ஓ ..? (ரோஜாப் பூவும்)

நான் கடக்கும் பால நிழலில் நீர் நின்று…. போவதே இல்லை
நீர் சுழித்து நடந்த பிறகும் நதி நின்று-போவதில்லை
நாள் இங்கே நீரைப்போலே நித்தம் என்னை விட்டுக்
கண்ணை விட்டுக் கடந்து தூரம் போகும்
வாழ்விங்கே நதியைப் போலே உந்தன் நினைவினில்
தளும்பிடத் தொடர்ந்து தேடி ஓடும்.. ஓ ..ஓ ..ஓ (ரோஜாப் பூவும்)

Sunday, December 25, 2011

தேவாலயம் செல்வோம்

தேவாலயம் செல்வோம்
நித்தம் ஜெயம் தரும் தேவனைச் ஜெபித்திடவே - தினம்
வேதாகமம் சொல்வோம் (தேவாலயம்)

ஆலயம் ஆண்டவர் அன்பின் வீடு
அன்பர்கள் யாவரும் கூடிடும் கூடு
கூடியே தேவனைப் பாடியே மகிழ்வோம்
பாடியே ஏசுவின் மகிமையைப் புகழ்வோம் (தேவாலயம்)

தீபத்தின் ஒளியினில் சுடர்விடும் தூய்மை
தேவனின் கருணையில் துளிர்விடும் தாய்மை
தூயவள் மரியின் தாய்மையில் மலர்ந்த
பாலனின் புகழைப் பாலர்கள் பாடிட (தேவாலயம்)

ஞானத்தைத் தேடி வருபவர் கோடி
நியாயத்தைத் வேண்டி அழுபவர் கோடி
நன்மைகள் கோரி தொழுபவர் கோடி
நன்றிகள் கூறி மகிழ்பவர் கோடி (தேவாலயம்)

கலங்கரை விளக்கென வழி தரும் சிலுவை
கவலைகள் விலகிட நிழல் தரும் சிலுவை
இருகரம் விரித்தே வருகென அழைக்கும்
வருகிற யாவர்க்கும் கதவுகள் திறக்கும் (தேவாலயம்)
__________________________________________________________

அனைவருக்கும் கிருத்துமஸ் நல்வாழ்த்துக்கள்